ARTIST'S PROFILE DIRECTORY

Lakshmansruthi.com

Kavignar Nalla Arivazhagan
Kavignar Nalla Arivazhagan - List of Kavignargal

சமீப காலங்களில் கவிஞர்கள் என்று சொல்லிக் கொள்ளும் வகையில் நிறைய  பேர் பொது மக்களுக்கு அறியப்படாதவர்களாக இருக்கிறார்கள். உண்மையில் திறமை வாய்ந்தவர்களாகவும் நல்ல அறிவு படைத்தவர்களாகவும், பல்கலைக்கழகப் படிப்பிலும் தேர்ச்சி பெற்றவர்களில் குறிப்பாக வளரும் கவிஞர்கள் வரிசையில் நல்ல: அறிவழகன் என்பவர் ஓர் முன்னுதாரணமாகத் திகழ்ந்து வருகிறார்.

திருமதி நல்லதம்பி, சாரதா என்ற தம்பதியர்க்கு இவர் 1-4-1972 அன்று மகனாகப் பிறந்தார். “அறிவு“ என்று செல்லமாக அழைக்கப்படும் இவருக்கு சோழன் என்ற ஒரு தம்பியும் சங்கீதா என்ற ஒரு சகோதரியும் உண்டு. இவரது அன்னை எழுத்தறிவு இல்லாமலேயே இசை ஞானம் கொண்டவர்.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த காட்டுமன்னார்குடி வட்டத்தில் சேத்தியா தோப்பு என்ற இடத்தில் அமைந்து இருக்கும் நந்தீஸ்வரம் இவரது பிறப்பிடமாகும். இவரது தாய்மொழி தமிழ். குரு என்று இவருக்கு அமைந்தது நண்பர்களின் வட்டாரமே. அவர்கள்தான் அறிவழகனைப் பண்படுத்தி அவரின் மேதாவிலாசத்தை ஊக்குவித்து கவிதை, இசை ஆகிய இருதுறைகளிலும் மேம்படச் செய்தனர். தொடக்கக்கல்வியி லிருந்து 8வது வகுப்பு வரை டி.பவழங்குடியிலுள்ள திருவள்ளுவர் நடுநிலைப் பள்ளியில் படித்தார். அதன்பிறகு சிதம்பரத்தில் உள்ள நந்தனார் ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் அறிவழகன் பிளஸ் 2 வரை படித்தார்.

B.Sc (சென்னைப் பல்கலைக்கழகம்)

B.Ed (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்)

M.A  தமிழ் (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்)

MHRM (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்)

கவிதைகள் புனைவதில் நாட்டங்கொண்ட அறிவழகன் முதன்முதலில் “கனிந்து கனிந்து மனம் உருகுகின்றேன்“ இறைவனார் சிவனைப் போற்றும் வகையில் பாடல் ஒன்றை இயற்றினார். தான் கவிஞராக அங்கீகரிக்கப்பட்டதற்கான இப்பாடலைக் குறிப்பிட்டார். கிட்டத்தட்ட 2000 பாடல்களை எழுதிய இவருக்கு மிகவும் பிடித்த பாடல் அருட்பொருஞ் சோதி ராமலிங்க அடிகளார் எழுதிய “வானத்தின் மீது“ என்று தொடங்கும் பாடலாகும்.

பள்ளியில் மற்றும் கல்லூரிகளில் கவிதைப் போட்டிகளில் கலந்து கொண்டு நிறைய பரிசுகளும், சான்றிதழ்களும், பரிசுக் கேடயங்களும் பெற்றிருக்கிறார். இசை ஆர்வம் கொண்ட இவருக்கு கீ – போர்டு வாசிக்கவும் தெரியும்.

சமூக சேவையில் நாட்டங்கொண்ட அறிவழகன் முதன் முதலில் இசைத் தொகுப்பு (ஆல்பம்) ஒன்றை “செந்தமிழ் நாடு“ என்ற தலைப்பில் நாட்டுப்புறப் பாடல்களை ஒலிப்பேழை வடிவத்தில் வெளியிட்டார். “நஞ்சை வெளி” என்ற மற்றொரு தொகுப்பையும் வெளியிட்டிருக்கிறார்.

இது தவிர திரைப்படத்திற்காக கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதித்தருவது போன்ற அலுவல்களில் அறிவழகன் தன்னை முழுமையுடன் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.

இவருக்குக் கர்நாடக இசையில் பிடித்த ராகங்களாக அமிர்த வர்ஷிணியையும் சுத்த தன்யாசியையும் குறிப்பிடுகிறார். சிறந்த கர்நாடக இசைக் கலைஞராக கே.ஜே யேசுதாஸ், இளையராஜா மற்றும் டி.எம்.எஸ், ஆகியோரைக் அவர்களைக் குறிப்பிடுகிறார். பெண்களில் திருமதி கே.பி. சுந்தராம்பாள், எஸ். ஜானகி, பி. சுசிலா, சித்ரா மற்றும் ஆகியோரின் இசை இவருக்கு மிகவும் பிடிக்கும்.

சென்னையில் தனக்குப் பிடித்தமான கலையரங்கங்களில் மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப், ராஜா அண்ணாமலை மன்றம்,  ஆகியவற்றை குறிப்பிட்டார். தன்னுடன் வாசிக்கும் கீ போர்டு(Key Board)  சீர்காழி சுந்தரய்யாவையும், தனக்கு இசைக்கலையிலும், கவிதைத்துறையிலும் ஊக்கம் அளித்து வரும் விவேகம் என்ற தனது பள்ளி ஆசிரியரை மிகவும் பிடிக்கும் என்கிறார்.

கர்நாடக இசையில் பாடல்கள் இயற்றிய ஸ்ரீதியாகய்யர் அவர்களைப் பெரிதும் மதிக்கிறார். திரைப்படங்களில் தமக்கு மிகவும் பிடித்த படமாக “வசந்த மாளிகை“ யைக் குறிப்பிடுகிறார். பாடலாசிரியர்களில் கவிஞர் கண்ணதாசன் தன்னைக் கவர்ந்தவராகத் தெரிவிக்கிறார். திரைப்பட இசையமைப்பாளர்களில் தனக்குப் பிடித்தமானவர்களாக “மெல்லிசை மன்னர்“ திரு. எம்.எஸ் விஸ்வநாதன் அவர்களையும் “இசைஞானி“ இளையராஜா அவர்களையும் குறிப்பிடுகிறார். திரைப்பட நடிகர்களில் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அவர்களும் “புரட்சி நடிகர்” என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களும் தனது அபிமானத்துக்குரியவர்கள் என்றார். திரைப்பட நடிகைகளில் கே.பி.சுந்தராம்பாள் சாவித்திரி, மற்றும் கே.ஆர். விஜயா ஆகியோரையும் தனக்கு மிகவும் பிடிக்கும் என்கிறார். திரைப்பட உலகில் சிறந்த நகைச்சுவை நடிகராக “நடிகவேள்“ எம்.ஆர்.ராதா வைக் குறிப்பிடுகிறார். சிறந்த திரைப்பட இயக்குநராக திரு. எஸ்.பி. முத்துராமன் அவர்களைத் குறிப்பிடுகிறார்.

உறவு என்று சொல்வதற்குத் தன்னை ஈன்ற தாயைப் பெரிதும் மதிக்கிறார். தனது ஆத்ம நண்பராக மருத்துவர் வின்சென்ட் அவர்களைப் பெரிதும் விரும்புவதாகத் தெரிவித்தார். உணவு வகைகளில் சைவ  உணவை மிகவும் விரும்பிச் சாப்பிடப் பிடிக்கும் என்கிறார்.

தனக்குப் பிடித்த நிறமாக பச்சை நிறத்தையும், ஆடையுடுப்பதில் வெள்ளை நிறத்தையும் அதிகமாக விரும்புகிறார். தனக்கு மிகவும் பிடித்த இடமாக பிறந்த ஊரான டி. பவழங்குடியை (கடலூர் மாவட்டம்) தெரிவிக்கிறார்.

விளையாட்டில் கிராம மக்கள் விளையாடும் “கபடி” யை விரும்புவதாகக் கூறினார். தான் பெரிதும் விரும்பிப் படிக்கும் புத்தகங்களாக கல்கி, கண்ணதாசன் ஆகியோரின் படைப்புகளை குறிப்பிட்டார்.

தனக்கு அரசியலில் மிகவும் பிடித்தவராக கர்மவீரர் காமராஜ் அவர்களைக் குறிப்பிட்டார். அடுத்து முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் திரு A.P.J அப்துல்கலாம் அவர்களை மிகவும் விரும்புவதாக கூறினார்.

அறிவழகன் தனது இசையாற்றலைத் தமது அன்னை மூலமாகவே வளர்த்துக் கொண்டார். தன்னைப் பாராட்டிய முதல் நபர் தாய் தந்தையரே என்றார். முதன் முதலில் தன் பள்ளியில் வாங்கிய சான்றிதழைப் பெருமையாகக் குறிப்பிட்ட இவர் “புறப்படு தோழா“ – என்ற ஈழத்தமிழருக்கான விடுதலைக் குரல் பாடலைப் பாடியதில் தனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.

எல்லா மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் தன் கவிதைகள் நல்ல விஷயங்கள் அடங்கியதாகவும், நம்பிக்கையைப் பரப்பும் வகையில் இருக்க வேண்டும் என்ற குறிக்கோள் இவரின் ஆழ்மனதில் பதிந்திருக்கிறது. இவரின் இசையில் முதன்முதலில் குறுந்தகடு வெளியிட்ட சமயமே தனக்கு நண்பர்களிடமிருந்தும், குடும்பத்தினரிடையேயும் சந்தோஷத்தை வரவழைத்தாகக் கூறுகிறார். தொலைக்காட்சி, வானொலியில் இவரின் பாடல்கள் ஒளிபரப்பட்டோ, ஒலிபரப்பான சமயம் எல்லோருக்கும் தனது படைப்புகள் போய்ச் சேர வேண்டும் என்ற உந்துதல் பிறந்தாகக் கூறினார்.

இவருக்கு 03.06.1996 அன்று திருமணம் நடைபெற்றது. மனைவியின் பெயர் தெய்வமணி ஆகும். மகளின் பெயர் இசையாலயா மகனின் பெயர் தமிழ்பாரதி ஆகும்.

தான் வாங்கிய முதல் சம்பளத்தில் தன்னுடைய பெண் குழந்தைக்குக் கால் கொலுசு வாங்கி அவள் காலில் மாட்டியதை பெருமையுடன் குறிப்பிட்டார்.

தான் முதலில் ஒலிபெருக்கியில்லாமல் பொதுமக்கன் முன் பாடிய சம்பவத்தைப் பற்றி அவர் தெரிவித்த சுவையான சம்பவம் என்னவென்றால், தன் நண்பர்களிடம் ஒரே சமயத்தில் 2000 பேரைக் உடனே வரவழைத்துக் காட்டுவேன் என்று விளையாட்டாக சவால் விட்டதை உடனடியாக அதைச் செயல்படுத்தும் விதத்தில் பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடமாகிய சென்னை, தியாகராயநகர் பேருந்து நிலையம் முன்பாக யாரும் எதிர்பாராவண்ணம் “மயக்கமென்ன கலக்கமென்ன“ என்ற வரிகளில் வரும் வசந்தமாளிகை திரைப்படப்பாடலை பாடியதன் விளைவாக, பேருந்து ஓட்டுநர் முதல் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கண்டு கேட்டு ரசித்தனர். போக்கு வரத்து நெரிசல் சிக்கலாகும் நிலையை உணர்ந்த அங்குள்ள காவல்துறையினரால் முறைகேடாக நடத்தப்பட்டதைக் கண்டு அங்குள்ள மக்களின் முன்பாக தன்னை அவ்வாறு நடத்தக் கூடாதென்று காவல் துறையினரிடம் தைரியமாக தெரிவித்த பின்பு அவர்கள் அங்குள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்ததில் அனுமதி பெறாமல் இனிமேல் அப்படி எந்த ஒரு நிகழ்ச்சியையும் நடத்தக் கூடாதென்று சொல்லி காவல்துறை அதிகாரிகள் அவரை விட்டுவிட்டனர். இந்நிலையில இவர் பாடிய பாடலைக் கேட்ட பெண்மணி ஒருவர் ரூ 50/- ஐ சன்மானமாகக் கொடுத்தார்.

அறிவழகன் பின்பொரு சமயம் காவல் துறையினரிடம் முன் அனுமதி வாங்கி தான் முன்பு நடத்திய அதே இடத்தில் (தி.நகர் பேருந்து நிலையம்) “எய்ட்ஸ் விழிப்புணர்வு“ சம்பந்தமான நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கும் போதே காவல் துறையினர் இவரை விசாரித்த பொழுது தான் முன் அனுமதி பெற்றுத்தான் நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருப்பதாகக் கூறியும் அவர்கள் இதை நம்பாமல் இவரைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விட்டனர். அறிவழகனைப் பார்த்த காவல்துறையினர் அவர் முன்பே தன்னை அழைத்துக் கொண்டு வந்த காவல் அதிகாரியிடம் ஏற்கெனவே முன் அனுமதி பெற்று வந்த இவரை ஏன்தான் தொந்தரவு செய்கிறீர்கள் என்று எச்சரித்து விட்டு அறிவழகனிடம் நடந்த நிகழ்ச்சிக்காக வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டார்.

மற்றும் ஒரு சமயம் அறிவழகன் குடும்பக்கட்டுப்பாடு ஆணுறை அணிதல் மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு சம்பந்தமாக கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில் சுமார் 15,000 பேர் முன்னிலையில் மூன்று மணி நேரம் தன் நிகழ்ச்சியை நடத்திக்காட்டியதில் சென்னை மாநகரத் தந்தை மா. சுப்பிரமணியம் அவர்கள் வருகை புரிந்ததை நினைவு கூர்ந்தார்.

“PSORIASIS“ என்று அழைக்கப்படும் நோய்க்கு நிவாரணம் அளிக்கும் விதம் தன்னுடைய நிகழ்ச்சியில் மக்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்கினார்.

“மகான்கள் மறைவதில்லை“ என்ற நூலை இவர் இயற்றியிருக்கிறார்.

கோடீஸ்வரர் ஒருவர் தான் மேற்கொண்ட இறை மருத்துவப் பணிக்கு முக்கிய காரணமாக விளங்கியவர் அறிவழகன் ஆவார். இம்மருத்துவப் பணியில் இதுவரை 56 பேர் சிகிச்சை பெற்று நோயிலிருந்து மீண்டனர்.

நல்ல அறிவழகனுக்கு நாட்டுப்புறப்பாடல்களின் மீது அதிகப் பற்று உண்டு. தானே நடத்தி வரும் “சாரல் கலைக்குழு“ என்ற அமைப்பில் ஏராளமான இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

எந்நேரத்திலும் தான் அதிகமாக விரும்பும் பாடலாக “கனிந்து கனிந்து“ என்று தொடங்கும் சிவன் பற்றிய பாடலைக் குறிப்பிடுகிறார். தான் இன்னும் கர்நாடக சங்கீதத்தை விரிவாகக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார். சிறந்த இசை மேதையாக இளையராஜாவைக் குறிப்பிடுகிறார். வளரும் திரைப்படப் பின்னணிக் கலைஞர்களில் மதுபாலகிருஷ்ணன் அவர்களின் குரல் தன்னை வசியப் படுத்துகிறது என்கிறார். கர்நாடக இசையில் புகழ் பெற்று விளங்கும் சிறந்த இசைக்கலைஞர்களிடமும், வளரும் இசைக்கலைஞர்களிடம் இருக்கும் திறமையைப் பற்றி வியந்து பாராட்டியிருக்கிறார்.

தன் ரசிகர்கள் அல்லது வளரும் இன்றை இளைய தலைமுறையினர்களுக்கு முக்கியமாக சமூக அக்கறையும் அதைப்பற்றிய விழிப்புணர்வும் அதிகமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

தன் தாய்க்கிருக்கும் இசைப்பற்றை பெருமையாகக் கருதுகிறார். தம் வாழ்வில் ஓர் சிறந்த கவிதையாளராகப் புகழ் பெற வேண்டும் என்று அதற்கான ஆயத்தங்களையும் மேற்கொண்டு வருகிறார்.

“இசைஞானி“ இளையராஜா அவர்கள் பாடிய பாடல்களையும், வசந்த மாளிகை திரைப்படத்தில் உள்ள எல்லா பாடல்களையும் விரும்பிக் கேட்டு ரசிப்பதில் அலாதி ஆனந்தம் கொள்கிறார். இது மட்டுமல்லாமல் பூம்புகார் திரைப்படத்தில் வரும் கே.பி. சுந்தராம்பாள் பாடிய “வாழ்க்கை எனும் ஓடம்“ என்ற பாடலை அதிகமாக ரசித்துக் கேட்டிருக்கிறார். தான் நடத்திய மேடை நிகழ்ச்சிகளிலேயே வேலூரில் “சாரல் கலைக்குழு” நடத்தியதைச் சிறந்த நிகழ்ச்சியாக குறிப்பிடுகிறார்.

தன்னை இன்றளவும் பாதித்த பாடல்களாக இளையராஜாவின் இசையில் தாய்மையைப் போற்றும் பாடல்களை தெரிவித்தார்.

சுத்த தந்யாசி ராகம் இவருக்கு மிகவும் பிடிக்கும்.

இவர் பங்களிப்பில் “என் இனிய தமிழ் மக்களே” என்று ஒரு திரைப்படம் முழுவதும் முடிந்த நிலையில் அது வெளிவராத நிலையில் உள்ளது. அத்திரைப்படத்திற்கான ஒலிப்பதிவு வேலைகள் தற்காலிகமாக முடிவடையவில்லை. என்பதையும் தெரிவித்தார். பொதுவாக எழுதுதல், படித்தலையே பெரிதும் விரும்புகிறார். உயர்வான கருத்துக்களையுடைய புத்தகங்கள் தமக்கு அறிவைப் பெற்றுத் தருகின்றன என்று வெளிப்படையாகப் பாராட்டுகிறார். இதுவரை தான் எதிர்பார்த்த திரைப்பட வாய்ப்பு வரவில்லை என்கிறார்.


கவிதை, இசைத்துறையில் நாட்டங்கொண்டிராவிட்டால் ஆசிரியர் தொழிலைத் தேர்ந்தெடுத்திருக்கலாம் என்று தெரிவித்தார். பள்ளிப் பருவத்தில் தான் பாடகராக வேண்டும் என்ற தன் லட்சியத்தை குறிக்கோளைக் கொண்டவராகத் திகழ்ந்தார். தன் குடும்பம் ஒரு விவசாயக் குடும்பமாகத் திகழ்ந்திருக்கிறது என்றார். வருங்காலத்தில் தனது அனுபவங்களைப் புத்தக வடிவில் கொண்டு வருவதற்குண்டான எண்ணம் தனக்கிருப்பதாகக் கூறினார்.

பாண்டிச்சேரி வானொலியில் முதன்முதலாக இவரது “நேர் காணல்” நடைபெற்றதாகவும், சென்னைத் தொலைக்காட்சியிலும், சன் டி.வி. வந்த புதிதிலும் இவரது பேட்டிகள்..... ஒளிப்பரப்பாகி உள்ளது. தம் நினைவுக்கு அடிக்கடி வரும் நபர்களில் இளையராஜா முக்கியமானவராகத் திகழ்கிறார்.

ஒருமுறை தன் வீட்டில் உள்ள கேணியில் தடுமாறி விழுந்த தன் தாயாரின் நிலையைக் கண்டு வருந்திய தருணம் அடிக்கடி தம் நினைவுக்கு வருவதாகத் தெரிவித்தார். இரண்டு வருடங்களாக அவ்வுபாதையில் கஷ்டப்பட்டு மீண்ட அவரின் தாய் தற்போது உயிருடன் இல்லை என்று வருத்தத்துடன் கூறினார்.

தன் கவிதை, இசைத் திறன்களுக்கு அங்கீகாரம் அளித்த நண்பர்களின் அன்புக்கு என்றும் தான் கடமைப்பட்டவனாகத் திகழவேண்டும் என்று தெரிவித்தார். என்றும் மறக்க முடியாதவர்களாகத் திகழும் தம் தாய் தந்தையரையும், நண்பர்களின் நன் மதிப்பையும் பெற்ற அறிவழகன் தன் இரு குழந்தைகளுடன் இருப்பதை மகிழ்ச்சிகரமான பொழுதாகக் கருதுகிறார். கவலையளிக்கும் விஷயமாகத் தன் தாயின் மரணம் பற்றி தெரிவித்தார். மறக்க முடியாத இடமாக சேத்தியா தோப்பும் காலை வேளை 9 மணியை தன்னால் மறக்கமுடியாத நேரமாகக் கருதுகிறார்.


முகவரி
கவிஞர் நல்ல: அறிவழகன்
5/13 ஆறுமுகம் தெரு, (விரிவு),
வ.உ.சி நகர், பம்மல்,
சென்னை600 075.
போன்: 98416 16979 /95514 99484